தமிழகம்

விமானம் ஏழைகளின் வாகனமா?- எரிபொருள் விலை பாகுபாட்டை முன்வைத்து ராமதாஸ் கேள்வி

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலையைவிட விமான எரிபொருள் விலை குறைவாக இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், விமானம் என்ன ஏழைகளின் வாகனமா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததையடுத்து விமான எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.6.27 குறைத்துள்ளன. இதையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ.57.45 லிருந்து ரூ.51.18 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக கடந்த மாதம் பெட்ரோல் விலையை விட விமான எரிபொருள் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. இயற்கைக்கு முரணான இந்த விலை நிர்ணயம் எவ்வகையான பொருளாதார ராஜதந்திரம் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்று கடந்த 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.

அடுத்த 10 நாட்களில் விமான எரிபொருள்விலையை மீண்டும் ஒருமுறை குறைத்த எண்ணெய் நிறுவனங்கள், இப்போது அத்தியாவசியத் தேவைக்கான டீசல் விலையை விட, விமான எரிபொருள் விலை குறைவு என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றன.

மத்தியில் புதிய அரசு பதவியேற்ற புதிதில், ஜூன் 1-ம் தேதி ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.61.12 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.74.60 ஆகவும், விமான எரிபொருள் விலை ரூ.76.05 ஆகவும் இருந்தன.

ஆனால், இப்போது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.51.34 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.61.38 ஆகவும், உள்ளன. விமான எரிபொருள் விலை இவற்றைவிட குறைவாக ரூ.51.18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் பெட்ரோல் விலையை 13.22 ரூபாயும், டீசல் விலையை 09.88 ரூபாயும் மட்டுமே குறைத்த எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருள் விலையை மட்டும் ரூ. 25.00 குறைத்துள்ளன.

அதாவது பெட்ரோல் விலையை விட சுமார் இரு மடங்கு அளவுக்கும், டீசல் விலையை விட இரண்டரை மடங்கு அளவுக்கும் விமான எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்திருக்கின்றன.

இந்த 3 வகை எரிபொருட்களில் டீசலின் பயன்பாடு தான் அதிகம். விவசாயம், மீன்பிடித் தொழில், சிறு, குறு, நடுத்தர மற்றும் கனரக தொழில் நிறுவனங்கள், பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியத் தேவைகளுக்கும் டீசல் தான் பயன்படுத்தப்படுகிறது. இரு சக்கர ஊர்திகள் மற்றும் கார்களுக்கு பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. இந்த இருவகை எரிபொருட்களையும் பயன்படுத்துவோரில் பெரும் பகுதியினர் ஏழைகள்; குறிப்பிட்ட விழுக்காட்டினர் மட்டும் நடுத்தர வர்க்கத்தினராக இருக்கலாம்.

அதுமட்டுமின்றி, இந்த இரு வகை எரிபொருட்களுமே விமான எரிபொருளுடன் ஒப்பிடும்போது குறைந்த சக்தி கொண்டவை ஆகும். மேலும், விமான எரிபொருள் பணக்காரர்கள் அதிகம் பயன்படுத்தும் விமானத்திற்கானதாகும். எனவே தான், விமான எரிபொருளுக்கு அதிக விலையும், பெட்ரோல், டீசலுக்கு குறைந்த விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால், இந்த யதார்த்தத்தை மறந்துவிட்ட மத்திய அரசு கடந்த சில மாதங்களில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.7.75-ம், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.6.50-ம் உயர்த்தி கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன் மக்களுக்கு கிடைக்காமல் தடுத்துவிட்டது.

எனவே தான் விமான எரிபொருளைவிட பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களுக்கு பணக்காரர்கள் பயன்படுத்தும் எரிபொருளைவிட அதிக கட்டணம் விதிக்கப்படுவதன் பின்னணியில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை, இரு சக்கர ஊர்திகளில் செல்பவர்கள் அதைவிட்டுவிட்டு விமானங்களில் பயணம் செய்ய வேண்டும் என்ற முற்போக்கு எண்ணம் தான் இந்த முடிவுக்கு காரணமாக இருக்குமோ? என்று எண்ணத் தோன்றுகிறது. எப்படியாயினும் இது நியாயமானது அல்ல.

எனவே, ஏற்கெனவே நான் வலியுறுத்தி வருவதைப் போல பெட்ரோல், டீசல் விலைகளையும், வரிகளையும் மறு ஆய்வு செய்து, விமான எரிபொருள் விலையை விட குறைவாக இருக்கும் வகையில் நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசையும், எண்ணெய் நிறுவனங்களையும் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT