நாங்கள் அறிவியலுக்கு எதிரானவர்கள் அல்ல என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தெரிவித்தார்.
மக்களுக்கான அறிவியல் பேரவை சார்பில், அணுசக்திக்கு எதிரான பசுமை அரசியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சுப. உதயகுமார் கூறியது: கூடங்குளம் குறித்து மத்திய அரசு முரண்பாடான கருத்துகளைக் கூறி வருகிறது. கூடங்குளத்தில் விபத்து நடந்தால் மட்டுமே பிரச்சினைகள் தெரியவரும். இதுகுறித்து முன்னாள் முதல்வரிடம் பேசியபோது, முடியும் நிலையில் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். ஆனால், தற்போது 3 மற்றும் 4-வது உலைகள் தொடக்க நிலையில்தான் உள்ளன. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. நாங்கள் அறிவியலுக்கு எதிரானவர்கள் அல்ல. நியூட்ரினோ திட்டம் குறித்து, மக்கள் மத்தியில் கருத்து கேட்க வேண்டும். மக்கள் விவாதித்து இந்த திட்டங்களை ஏற்றுக் கொண்டால் நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்.
நியூட்ரினோ திட்டமானது, அமெரிக்க நிறுவனம் ஆயுதம் தயாரிப்பதற்குத்தான் பயன்படுத்தப்படும். இந்தத் திட்டங்கள் சாதாரண மக்களுக்கான திட்டங்கள் இல்லை.
இந்தியாவில் 60 கோடி பேர் உணவு, நீர், ஊட்டச்சத்து பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர். இதை கண்டுகொள்ளாமல் வளர்ச்சி என்ற பெயரில் முதலாளிகளுக்கான பணியை செய்து வருகிறது. பிற நாடுகள் செய்வதை அப்படியே இந்தியா பின்பற்றுகிறது. இதனால் சாதாரண மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. ஆந்திரா, குஜராத், மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் அணு உலைகள் நிறுவப்பட உள்ளன என்றார்.