சொத்துவரி செலுத்தாத நட்சத்திர ஓட்டல்கள் முன்பு திருநங்கையர்களை நடனமாட வைத்து வரி வசூலித்த சென்னை மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருநங்கைகள் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சொத்து வரி செலுத்தாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வரி வசூலிக்க பல வழிமுறைகள் உள்ளன. ஆனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதைப் பயன்படுத்தாமல் வரி செலுத்தாத ஓட்டல்கள் முன்பு திருநங்கைகளை நடனமாட வைத்து வரி வசூலித்துள்ளனர்.
மாநகராட்சியின் இந்த செயல் மனித உரிமைக்கு எதிராகவும், திருநங்கைகளை அவமானப்படுத்துவதாகவும் உள்ளது. இந்த செயலை செய்ய அனுமதித்த சென்னை மாநகராட்சி ஆணையர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.