தமிழகம்

மின்தடை புகாருக்கு புதிய தொலைபேசி சேவையை ஏர்டெல் தொடங்கியது: ‘தி இந்து’ செய்தி எதிரொலி

செய்திப்பிரிவு

மின்தடை பற்றி புகார் தெரிவிக்க புதிய எண்ணில் (1912) தொடர்பு கொள்ள முடியாமல் லட்சக்கணக்கான ஏர்டெல் செல்போன் வாடிக்கையாளர்கள் கடந்த ஒருமாதமாக சிரமப்படுகின்றனர் என்று “தி இந்து” வியாழக்கிழமை செய்தி வெளியிட்டது.

இதையடுத்து ஏர்டெல் செல்போன் நிறுவனத்துக்கு புதிய தொலைபேசி எண் சேவையை வழங்குமாறு, தமிழ்நாடு மின்சார வாரியம், பி.எஸ்.என்.எல். நிறுவன தலைமைப் பொது மேலாளரிடம் வலியுறுத்தியது.

அதைத் தொடர்ந்து புதிய தொலைபேசி எண்ணுக்கான சேவையை ஏர்டெல் நிறுவனத்துக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் உடனடியாக வழங்கியது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி மேகநாதன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை மாநகர மின் நுகர்வோர்கள் மின்தடை குறித்த தங்களது புகார்களை தெரிவிக்கும் கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும் மையத்தின் தொலைபேசி எண் மார்ச் 17-ம் தேதி முதல் 155333-க்குப் பதிலாக 1912 என்று மாற்றப்பட்டது. தற்போது அனைத்து செல்போன் நிறுவனங்களும் தங்களது இணைப்பகத்தில் தொடர்பு கொள்ள ஏதுவாக மாற்றியுள்ளனர்.

எனவே, மின் நுகர்வோர்கள் தங்களது புகார்களை 1912 அல்லது 044 28517695 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT