தேசிய அளவில் காலியாக உள்ள முதுநிலை படிப்புக்கான இடங்களின் பட்டியலை அகில இந்திய முதுநிலை படிப்பு இடஒதுக்கீடு கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி காலியிடங்கள் காட்டப்படாததால், அக்கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இது குறித்து சென்னை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவி எஸ்.சவுந்தர்யா கூறியதாவது: இஎஸ்ஐ நிர்வாகம் மருத்துவக் கல்வித் துறையில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. இதையடுத்து இஎஸ்ஐ நடத்தி வரும் கல்லூரிகளை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது.
இஎஸ்ஐ நிர்வாகமே இதை நடத்த வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம். இந்நிலையில் அடுத்த கல்வியாண்டில் தேசிய அளவில் காலியாக உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களின் பட்டியலில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள காலியிடம் காட்டப்படவில்லை. அதனால் அடுத்த கல்வியாண்டில் முதுநிலை படிப்பில் மாணவர் சேர்க்கையை இஎஸ்ஐ நடத்தப்போவதில்லை என்பது தெரியவருகிறது.
இஎஸ்ஐயில் மருத்துவக் கல்லூரி வந்ததிலிருந்து மருத்துவமனையின் சிகிச்சைத் தரம் உயர்ந்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இஎஸ்ஐ, மருத்துவக் கல்லூரி துறையை தொடர வேண்டும். ஏப்ரல் 15-ம் தேதிக்குள் முதுநிலை படிப்பு காலியிடங்களை அகில இந்திய முதுநிலை மருத்துவ கவுன்சில் காலியிட பட்டியலில் காட்ட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.