தமிழகம்

ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி: சென்னை பல்கலை. அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் தனியார் கலைக் கல்லூரிகளில் இலவச கல்வி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏழை மாணவர்கள் இளநிலைப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் இலவச கல்வி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த இலவச கல்வி திட்டத்தின் கீழ், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சென்னை பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

யார் யாருக்கு முன்னுரிமை?

மேற்கண்ட 3 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாயம் மற்றும் கூலி வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள், குடும்பத்தில் பட்டப் படிப்புக்கு வரும் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள், கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இலவச கல்வி திட்ட விண்ணப்பத்தையும் இதர விவரங்களையும் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.

கடைசி நாள்

பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை தேவையான சான்றிதழ்களுடன், பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான 15 நாட்களுக்குள் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப் பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT