தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய கலந்தாய்வில் 1,417 கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்கள் நிரம்பின. மீதமுள்ள 817 கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013-14-ஆம் ஆண்டின் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டன.
இந்த எழுத்துத் தேர்வில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜனவரி 27-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆண்டு மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பணியிடங்கள் உட்பட 2,234 காலி பணியிடங்கள் இருந்தன. இதில் 1,417 பணியிடங்கள் நிரம்பியுள்ளன.
அடுத்த கட்ட கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.