தமிழகம்

தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு: சன் டி.வி. ஊழியர்கள் உட்பட 3 பேரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி மறுப்பு - சிபிஐ மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

செய்திப்பிரிவு

தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் மற்றும் சன் டி.வி. ஊழியர்கள் 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, அவரது வீட்டில் 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன் டி.வி. முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ போலீஸார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ சார்பில் வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜரானார். கவுதமன் உள்ளிட்ட 3 பேர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ரமேஷ், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.மாலா பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் ஆரம்பகட்ட விசாரணை நடந்துள்ளது. வழக்கும் பதிவு செய்யப்பட்டுவிட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு, குற்றவியல் நடைமுறை விதிகளின்படி இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைதுக்கு முன்பும், பின்னரும் டெல்லி மற்றும் சென்னையில் விசாரிக்கப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் யாரும் கைது செய்யப்படவில்லை.

காவலில் விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் போதுமானதாக இல்லை. மனு முறையாகவும் இல்லை. எனவே, சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை சிபிஐ விசாரிக்க விரும்பினால், சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் விசாரிக்கலாம்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT