தமிழகம்

98 ஒன்றியங்களில் மட்டும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம்: தமிழகத்தில் 60 லட்சம் விவசாயிகள் வேலை இழக்கும் அபாயம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் குறிப்பிட்ட 98 ஒன்றியங்களில் மட்டுமே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் சுமார் 60 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என அகில இந்திய விவசாயத் தொழிற் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ஜி.மணி தெரிவித்தார்.

அகில இந்திய விவசாயத் தொழிற்சங்கம் சார்பில் அரசு நலத் திட்டங்களும், அதைப் பெறுவதற்கான வழிமுறைகளும் என்ற தலைப்பில் விருதுநகர் மாவட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிறப்புக் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலர் ஜி.மணி சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அகில இந்திய விவசாயத் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, பொதுச் செயலர் ஜி.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் குறிப்பிட்ட 98 ஒன்றியங்களில் மட்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்காக மக்கள் பங்கேற்புடன் கூடிய தீவிர செயல்பாடு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மீதம் உள்ள ஒன்றியங்கள் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

அனைத்து ஒன்றியங்களிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இதற்காக எல்லா இடங்களிலும் வேலைகேட்டு மனு வழங்குவது என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பொறுத்தவரை விவசாயத் தொழிலாளர்கள் மட்டுமின்றி விவசாயப் பணிகள் அல்லாத காலத்தில் சிறு, குறு விவசாயிகளும் இப்பணியில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் 98 ஒன்றியங்களைத் தவிர மற்ற ஒன்றியங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நிறுத்தப்படுவதால் தமிழகத்தில் சுமார் 60 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இவர்களது வாழ்க்கையைக் காப்பாற்ற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

முதியோர் ஓய்வூதியத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் எவ்வளவு ஓய்வூதியர்கள் என்பதற்கேற்ப தொகையை ஒதுக்கீடு செய்யவில்லை. ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் ஒதுக்கீடு செய்துவிட்டு அதை மாவட்ட வாரியாக, வட்டாரம் வாரியாக பிரிக்கும்போது தொகை குறைந்துவிடுகிறது. இதனால் பலருக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. காரணம் கேட்டால் அவர்கள் தகுதியற்றவர்கள் என்கிறது தமிழக அரசு. அது நியாயம் இல்லை.

மேலும், நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி 100 சதவீதம் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசிதான் பலரை பட்டினிச் சாவில் இருந்து தடுக்கிறது. இதற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதைக் கண்டித்து மார்ச் 10-ம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT