தமிழகம்

திண்டுக்கல்: போலி பெண் மருத்துவர் கைது- சிகிச்சை அளித்தபோது சிக்கினார்

செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகே போலி பெண் மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபோது, மாவட்ட மருத்துவநலப் பணிகள் துறை இணை இயக்குநர் நேற்று கையும், களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

திண்டுக்கல் அருகே முத்தழகுப்பட்டியில் போலி பெண் மருத்துவர், வீட்டில் கிளீனிக் நடத்துவதாக மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் ரவிக்கலாவுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அவரது தலைமையில் மருத்துவக் குழுவினர், போலீஸாருடன் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது முத்தழகுப் பட்டியில் கிளீனிக்கில் அமர்ந்து பெண் ஒருவர் மருத்துவர் போல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அவரிடம் இணை இயக்குநர் ரவிக்கலா விசாரணை நடத்தினார். அவர், அதே பகுதியைச் சேர்ந்த கவிதா (32) என்பதும், அவரது கணவர் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைபார்ப்பதும் தெரியவந்தது. இணை இயக்குநர் அப்பெண்ணைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தகவல் அறிந்த அதிமுக பிரமுகர்கள் மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் குவிந்து, போலி பெண் மருத்துவர் மீதான புகாரை வாபஸ் பெறும்படி வலியுறுத்தினர்.

அதற்கு இணை இயக்குநர், அரசு செய்யச் சொல்வதை நாங்கள் செய்கிறோம் என்றார். உடனே டி.எஸ்.பி. ராமச்சந்திரனிடம் ஆளுங்கட்சியினர் முறையிட்டனர். அவர், இணை இயக்குநர் புகாரை வாபஸ் பெற்றால், நாங்கள் அந்தப் பெண்ணை விடுவித்து விடுகிறோம் என்றார்.

ஆனால், கடைசிவரை இணை இயக்குநர் புகாரை வாபஸ் பெறாததால் போலி பெண் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT