எப்போதெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்துக்கு சுவாரஸ்யம் கூட்ட சிலபல நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம்.
அந்த வகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கையாண்டுவரும் யுக்தி வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பிரச்சாரத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்க, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போன்ற ஒருமித்த தோற்றம் கொண்ட பலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் சென்றால், ஆங்காங்கே கருப்புப் கண்ணாடி, தொப்பி, பெரிய கைக் கடிகாரம் என மேக்-அப் போட்டு வாக்காளர்களிடம் ஓட்டு கேட்பவர்களை பார்க்க முடிகிறது. இவர்கள், எம்.ஜி.ஆர். கையசைப்பது போலவே வாக்காளர்களைப் பார்த்து கையசைத்து அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கின்றனர். சிலர், எம்.ஜி.ஆர். குரலில் பேசவும், அவரது திரைப்படங்களில் இருந்து பிரபல பாடல்களைப் பாடியும் கவனத்தை ஈர்க்கின்றனர்.
எம்.ஜி.ஆர் மறைந்து இருபது ஆண்டுகள் கடந்துவிட்டாலும் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு உள்ள மதிப்பு சற்றும் குறையவில்லை. எனவே, இதுபோன்ற பிரச்சாரங்கள் எங்களுக்கு நிச்சயம் வாக்குகளைப் பெற்றுத் தரும் என கூறுகிறார் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக பிரச்சாரக் குழு மேலாளர்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து காலியான அத்தொகுதிக்கு வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.