தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது. லோக் ஆயுக்தா மசோதாவை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர் என தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், எட்டிமங்க லத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
அரசியல்வாதிகள், அமைச்சர் கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் 2014 ஜன. 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒடிசா, கர்நாடகம் மற்றும் குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சட்டம் வந்து ஓராண்டுக்கு மேலாகியும் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. இந்த ஊழலை லோக் ஆயுக்தா மூலம்தான் கட்டுப்படுத்த முடியும்.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கக் கோரி தலைமைச் செயலருக்கு அக்.13-ல் மனு அளித்தேன். அந்த மனுவை பொது மற்றும் நிர்வாகத் துறை முதன்மைச் செயலருக்கு தலைமைச் செயலர் அனுப்பினார். இருப்பினும் இதுவரை லோக் ஆயுக்தாவை அமைக்கவில்லை. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, தமிழக பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறை துணைச் செயலர் எஸ்.மாலதி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் லோக் ஆயுக்தா மசோதாவை உருவாக்குவது உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய அரசு லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவர ஆலோசித்து வருகிறது. இதனால் மத்திய சட்டத்துக்கு விரோதமாக அமையக் கூடாது என்பதை ஆய்வு செய்து லோக் ஆயுக்தா சட்டம் இறுதி செய்யப்படும். எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, மத்திய சட்டத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப். 26-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.