இலங்கை தமிழர்களுக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு இப்போதாவது நீதி கிடைக்க வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இலங்கையில் வாழும் தமிழர்களின் ஆதரவால்தான் இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா வெற்றி பெற்றார். தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தமிழர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வாக்குறுதிப்படி தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவம் திரும்பப் பெறப்பட வில்லை. தமிழர்களுக்குச் சொந்த மான வீடுகளும், நிலங்களும் அவர்களிடம் திரும்ப ஒப்படைக் கப்படவில்லை. தமிழர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்து வதற்கென்றே நிறுவப்பட்ட சோதனைச் சாவடிகள் அகற்றப் படவில்லை.
இவற்றையெல்லாம் விட மிக மோசமான காரியம் ஒன்று தற்போது நடந்திருக்கிறது. இலங்கை அதிபர் சிறிசேனா பிப்.2-ம் வெளியிட்ட அறிக்கையில், “பாரம்பரியமாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது அமைதியை நிலைநாட்டுவதற்கான கடமைகளை ராணுவம் மேற் கொள்ளும்” என்று கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.
நிர்வாகத்துக்கு அடிப்படைத் தேவைகளான நிலம் மற்றும் காவல்துறை தொடர்பான அதிகாரங் களை வழங்க 13-வது சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப் படவில்லை. ஆகவே, இந்த சட்ட திருத்தம் தமிழர்களுடைய பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்துவைக்கும் மருந்தாகிவிடாது என சர்வதேசத் தமிழ்ச் சமூகம் கருதுகிறது.
உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வை அவர்களே தேர்வு செய்துகொள்வதற்கு ஏதுவாக, ஐநா மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.
தற்போது இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் ஆணையத்துக்கு இந்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டும். இலங்கையில் ராஜபக்ச அரசு நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐநா மனித உரிமைகள் ஆணையம் நியமித்த குழு தன்னுடைய அறிக்கையை அடுத்த மாதம் சமர்ப்பிக்க உள்ளதாக அறிகிறேன். அவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்போது, அந்த அறிக்கை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர் களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளுக்கு இப்போதாவது நீதி கிடைக்க வேண்டும் என்று இலங்கையிலும், உலக நாடுகளிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் விரும்புகிறார்கள்.
விருப்பு வெறுப்பின்றி இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலையை ஆய்ந்து அறிந்து, அவர் களுடைய நீண்டகால வேட்கையை நிறைவு செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று தங்களை மன்றாடி கேட்டுக்கொள் கிறேன். இலங்கை அதிபரோடு தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் நல்ல விளைவுகளைத் தரும் முடிவுகள் வெளிவரும் என்று தமிழகத்தில் வாழும் நாங்களும், சர்வதேச தமிழர்களும் பெரிதும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.