தமிழகத்தில் நில அபகரிப்பு புகார் களை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை மையங்கள், சிறப்பு நீதிமன்றங்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட அமைப்புகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக வரும் புகார்களை பதிவு செய்து விசாரிக்கும்போது நில அபகரிப்பு தடுப்பு குழு அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வாய்ப்புள்ளது என பிப்ரவரி 10-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த தீர்ப்பை ஆட்சேபித்து வழக்கறிஞர் பி.பாலாஜி மூலமாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சிறப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள சட்டங்களை முற்றிலும் மீறுவதாக உள்ளது. சட்டம் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு சட்டத்தை அல்லது ஆணையை ரத்து செய்யமுடியாது என உச்ச நீதிமன்றம் கூறிய விளக்கத்தை மனுவில் தமிழக அரசு சுட்டிக் காட்டியுள்ளது.