நகைக் கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பொறியியல் பட்டதாரிக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மதுரவாயல் அருகேயுள்ள நெற்குன்றம் சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் தானாராம் (35). இவரது தம்பி கணேஷ் என்ற குணாராம் (28). இருவரும் நெற்குன்றத்தில் நகை மற்றும் அடகுக் கடை நடத்தி வந்தனர்.
கடந்த 2012 ஏப். 14-ம் தேதி பகல் வேளையில் நகைக் கடையில் குணாராம் தனியாக இருந்தார். அப்போது, சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை, நெல்லுக்கடை வீதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அப்பு என்ற ராமஜெயம் (25), கடைக்குள் வந்து, குணாராமை கழுத்தை அறுத்துக் கொன்று, தங்கம் என்று நினைத்து கடையிலிருந்த கவரிங் நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். இது, நகைக் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் 2012 மே 12-ம் தேதி பள்ளிக்கரணை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சந்திரபிரபா (59) என்ற பெண்ணிடம், பன்றிக் காய்ச்சல் தடுப்பு மாத்திரை விநியோகிக்க வந்திருப்பதாகக் கூறி, அவரைக் கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றார். சந்திரபிரபாவின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து ராமஜெயத்தைப் பிடித்து பள்ளிக்கரணை போலீஸில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், குணாராமை கொலை செய்தது ராமஜெயம் என்பது தெரியவந்தது. இதை யடுத்து, அவர் கைது செய்யப் பட்டார். இந்தக் கொலை வழக்கு பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வி. மகாலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட ராமஜெயத் துக்கு 4 சட்டப் பிரிவுகளின் கீழ் மரண தண்டணையும், 23 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் அந்தமான் முருகன் வாதிட்டார்.