தமிழகம்

தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு: இலங்கை அரசின் அறிவிப்புக்கு தமிழக கட்சிகள் வரவேற்பு

செய்திப்பிரிவு

தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்று புதிதாக பதவியேற்றுள்ள இலங்கை அரசு அறிவித்திருப்பதை திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் வரவேற்றுள்ளன.

திமுக தலைவர் கருணாநிதி

இந்தியா - இலங்கை இடையே 1987-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத் தின் தொடர்ச்சியாக, இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழர்கள் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்பதற்கு அந்த சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அதற்குப் பிறகு பொறுப்புக்கு வந்த அரசுகள் அந்த சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த இலங்கை உச்ச நீதிமன்றம், 13-வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்துவிட்டது.

இந்நிலையில், இலங்கையில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள சிறிசேனா அரசில் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கே, நாடாளுமன்றத்தில் 13-வது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாக்குறுதியை புதிய அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவோம் என்று அந்நாட்டு பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவித் திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பால் இலங்கை வாழ் தமிழர்களின் நீண்டநாள் கனவு நனவாகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு, மறு குடியமர்த்தல் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். மனித உரிமை மீறல் குறித்து வெளிப்படையாக விசாரணை நடத்தி, குற்றம் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

1987-ம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக் கும் இடையிலான ஒப்பந்தத்தில் இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரப் பகிர்வு அளிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது. ஆனால், இதுவரை இருந்த இலங்கை ஆட்சியாளர்கள் இதை அமல்படுத்தவில்லை. தற்போது, இந்த சட்டத்திருத்தம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இலங்கை நாடாளுமன்றத்தில் உறுதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பை இலங்கை அரசு விரைந்து நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்

இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றினால் தமிழ் சிறுபான்மை மக்களுக்கு எத்தகைய பயனும் விளையப் போவதில்லை. எனினும், இதன் மூலம் வடக்கு, கிழக்கு பகுதிகளை ஒரே மாகாணமாக இணைப்பதற்கு பயன்படும். மேலும், 18-வது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யப்போவதாக அறிவித் திருப்பது வரவேற்கத்தக்கது. மேற்கண்ட நடவடிக்கைகள் ஓர் இடைக்காலத் தீர்வுதான். தமிழீழமே நிலையான தீர்வாகும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT