தமிழகம்

கோயில் யானைகள் முகாம்: கோதை, வேதநாயகியின் குறும்புகள் - காட்சிகளை ரசித்த பார்வையாளர்கள்

செய்திப்பிரிவு

கோயில் யானைகள் முகாமில் பவானி ஆற்றில் குளியல் நடத்திய ஸ்ரீபெரும்புதூர் கோயில் யானை கோதை, ஆனந்தக் குளியலிலிருந்து விடுபட மறுத்து பாறையின் மீது அமர்ந்துகொண்டு அடம்பிடித்த காட்சியை பார்வையாளர்கள் கண்டு அசந்தனர்.

கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் 48 நாட்கள் தமிழக அரசின் கோயில் யானைகள் முகாம் நடந்து வருகிறது. இந்த யானைகள், அருகில் உள்ள பவானி ஆற்றில் பாகன்களால் குளிக்க வைக்கப்படுகின்றன. அப்போது யானைகள் பெரும்பாலும் பவானியின் ஆனந்தக் குளியலை விட்டு வரமறுத்து அடம்பிடித்து பாகன்களுக்கு கட்டுப்படாத காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

முகாம் தொடங்கிய நாளிலேயே வேதநாயகி என்ற யானை வரமறுக்க, அதன் பாகன் மரத்தின் மறைவில் ஒளிந்து விளையாட்டுக்காட்ட, வேதநாயகி வந்து மரத்தின் மறைவில் பாகன் ஒளிந்திருப்பதை பார்த்துவிட்டு திரும்ப ஓடிப்போய் ஆற்றுக்குள் இறங்கி போக்குகாட்டியது. எனவே, அந்தப் பாகன் நீ இப்படி செய்தால் சரிப்பட்டு வரமாட்டாய் என தண்ணீருக்குள் போய் மூழ்கி மறைய, பாகன் ஆற்றுவெள்ளத்தில் மூழ்கி விட்டதுபோல் கருதி தண்ணீருக்குள் உருண்டு புரண்டு தப்படித்து தண்ணீரில் மூழ்கிய பாகனை வெளியே வரவைத்தது. இந்த அற்புதக் காட்சியை இங்கு வந்திருந்த பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் யானை

இதேபோல் நேற்று மாலை 4 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் கோயில் யானை கோதை பவானியில் மணிக்கணக்கில் ஆனந்தக் குளியல் செய்துவிட்டு பாகனின் சைகைக்கு கட்டுப்படாமல் கரைக்கு வர மறுத்தது. அப்போது இன்னொரு யானையை குளிக்க வைக்க மற்றொரு பாகன் அழைத்து வர, உடனே கோதை ஆற்றின் நடுவே இருந்த பாறையின் மீது ஏறி உட்கார்ந்து தும்பிக்கையை உயர்த்தி பிளிறியது. தலையை அப்படியும், இப்படியுமாக ஆட்டி வரமாட்டேன் போ என்கிற மாதிரி அடம்பிடிக்க, பாகனுக்கு அதை ஆற்றிலிருந்து விடுபடுத்தி அழைத்து செல்வதற்குள் போதும், போதும் என்றாகிவிட் டது.

SCROLL FOR NEXT