தமிழகம்

2 மாதத்துக்குள் ஊதிய உயர்வு: வங்கி ஊழியர்கள் பிரச்சினையில் புதிய முடிவு

செய்திப்பிரிவு

இரண்டு மாதங்களுக்குள் ஊதிய உயர்வு குறித்த பிரச்சினையில் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என நேற்று நடைபெற்ற வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அகில இந்திய அளவில் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

இதையடுத்து, இந்திய வங்கிகள் நிர்வாகம், ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து நேற்றுமுன்தினம் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், ஊதிய உயர்வை 11 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தி வழங்க சம்மதம் தெரிவித்தது. இதை தற்காலிகமாக ஏற்றுக் கொண்ட ஊழியர் சங்கத்தினர் நேற்றைய வேலை நிறுத்தத்தை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், நேற்றும் அகில இந்திய வங்கிகள் நிர்வாகத்துடன், ஊழியர் சங்கத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஊதிய உயர்வு குறித்து இந்திய வங்கிகள் நிர்வாகத்துடன் இன்றும் (நேற்றும்) தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நாங்கள் ஊதிய உயர்வை 12.5 சதவீதத்தில் இருந்து அதிகரித்து தர வேண்டும் எனக் கோரினோம். வங்கிகள் நிர்வாகமும் எங்களிடம் ஊதிய உயர்வை 19 சதவீதத்தில் இருந்து சற்று குறைக்கும்படி கோரியது. இதையடுத்து, இருதரப்பிலும் கால அவகாசம் கோரப்பட்டது.

ஓய்வூதியம், மருத்துவ செலவுக்கான திட்டம், வாரத்துக்கு 5 நாட்கள் பணி போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக சிறு குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இப்பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில், அடுத்த 2 மாதங் களுக்குள் ஊதிய உயர்வு குறித்த பிரச்சினையில் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு வெங்கடாச்சலம் கூறினார்.

SCROLL FOR NEXT