தமிழகம்

வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் புதிய ரயில் நிலையம் அமைகிறது: இடத்தை தேர்வு செய்ய அதிகாரிகள் ஆய்வு

செய்திப்பிரிவு

வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் உயிரியல் பூங்கா என்ற பெருமை பெற்றது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இடப் பற்றாக்குறை காரணமாக மாநகரப் பகுதியில் இருந்து, 1976-ல் 602 ஹெக்டேரில் அடர்ந்த வண்டலூர் காட்டுப் பகுதிக்கு மாற்றப்பட்டது. தற்போது 152 வகையான 1,479 விலங்கினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தினமும் சராசரியாக 5,000-க்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விழாக் காலங்களில் இந்த எண்ணிக்கை பல்லாயிரம் முதல் லட்சத்தைத் தொடும்.

இந்தப் பூங்காவுக்கு பெரும் பாலானோர் மின்சார ரயிலில் வரு கின்றனர். அவ்வாறு வருவோர், வண்டலூர் ரயில் நிலையத்தில் இறங்கி, சுமார் 2 கிமீ தொலை வுக்கு நடந்து சென்று உயிரி யல் பூங்காவை அடைய வேண்டி யுள்ளது. இதனால், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அவ திக்குள்ளாயினர். எனவே, வண்ட லூர் உயிரியல் பூங்கா எதிரிலேயே ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, வண்டலூர்- ஊரப்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையே வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் ஓட்டேரி ரயில் நிலையம் என்ற பெயரில் புதிய ரயில் நிலையம் அமைக்க கருத்துரு தயாரிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், அங்கு ரயில் நிலையம் அமைக்க ரயில்வே நிர்வாகத்துக்குத் தேவையான 1.5 ஏக்கர் நிலத்தை வழங்குவது தொடர்பாக செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘நாங்கள் ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட இடம் அரசின் மேய்க் கால் புறம்போக்கு நிலம் என்பதும், அதை அருகிலுள்ள அரசுப் பள்ளி பயன்படுத்தி வருவதும் தெரிய வந்தது.

ரயில் நிலையம் அமைக்க போதிய இடம் இருப்பதால், அதை நில உரிமை மாற்றம் செய்து, ரயில்வே நிர்வாகத்துக்கு வழங்குவது தொடர்பான கருத்துரு, மாவட்ட ஆட்சியருக்கு விரைவில் அனுப்பப்படும்’ என்றார்.

SCROLL FOR NEXT