பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில வளர்ச்சிக்காக மட்டும் தனிக்கவனம் செலுத்துவது ஏன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் காக ‘மேக் இன் இந்தியா’ என்ற செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், குஜராத்தில் ‘எழுச்சிமிகு குஜராத்’ என்ற தொழில் வர்த்தக மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர் கள், உள்நாட்டின் தொழிலதிபர்கள் பலர் கலந்துகொண்டனர்.
குஜராத்தில் 10 ஆண்டு காலம் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, தற்போது நாட்டின் பிரதமர் என்பதை மறந்து, குஜராத்துக்காக 21 ஆயிரம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளார். அதன்மூலம் ரூ.25 லட்சம் கோடி அளவுக்கு தொழில் முதலீடு செய்ய வழிவகை செய்யவுள்ளார். நாட்டுக்கே பிரதமரான மோடி, குஜராத்தின் வளர்ச்சிக்கு மட்டும் விஷேச கவனம் செலுத்துவது ஏன்? அவர் குஜராத்துக்கு மட்டுமே பிரதமரா? மோடியின் இந்த செயல் கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைப்பதாகும்.
மோடியின் நடவடிக்கைகள், வாரணாசி கன்டோன்மென்ட் தேர்தலில் எதிரொலித்துள்ளது. அங்கு அனைத்து வார்டுகளிலும் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் லக்னோ கன்டோன்மென்டிலும் பாஜக தோல்வியடைந்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.