குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை பொதிகை (தூர்தர்ஷன்) தொலைக்காட்சி, சென்னை வானொலி மூலம் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றினார். அவர் பேசியதாவது:
இந்தியா சுதந்திர நாடாக இருப்பதற்கு நம் முன்னோர் தங்கள் சுவாசத்தை அளித்துள்ளனர். அவர்களது தியாகத்தை இந்த நாளில் நினைவுகூர்வோம். இந்திய சுதந்திரத்துக்கு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்களுக்கு இந் நாளில் மரியாதை செய்வோம்.
வன்முறையும், தீவிரவாதமும் கோழைத்தனமான நடவடிக்கை. நாட்டில் அமைதியை குலைக்க முயற்சிப்பவர்களை நாடு பார்த்துக் கொண்டிருக்காது. இங்கு தீவிரவாதத்துக்கு இடமில்லை. ஒற்றுமை என்பது நம் நாட்டில் இயற்கையாக அமைந்த ஒன்று. மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைவரிடமும் நல்லிணக்கம் ஏற்படட்டும். வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சி எனப் பல புரட்சிகளை தொழில் துறையில் மேற்கொண்டு, தற்போது, தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளோம். செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக் கோள் அனுப்பும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது நாட்டின் மகுடத்தில் சூட்டிய அணிகலன். இது உலக அரங்கில் மிகப்பெரிய அந்தஸ்தை இந்தியாவுக்கு அளித்துள்ளது.
உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா திகழ அனைவரும் இணைந்து செயல்படுவோம். பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இந்தியா’ திட்டத்துக்கு நமது பங்களிப்பை வழங்குவோம்.
நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உணவு தானிய உற்பத்தியில் ரூ.96.94 கோடி மதிப்பீட்டிலான திட்டத்தில் நுண்பாசனம் மூலம் இலக்கு எட்டப்பட்டுள்ளது. நடுத்தர, சிறிய விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் நுண்பாசனத் திட்டத்துக்காக வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் ‘தொலை நோக்குத் திட்டம்-2023’ மூலம் அனைத்து துறையிலும் வளர்ச்சி ஏற்படும். இதன்மூலம் மாநிலத் தின் பொருளாதாரத்தில் 22 சதவீதம் கூடுதல் வளர்ச்சி ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இதில் தனியார் முதலீடுகளை ஊக்கப்படுத்துவது வரவேற்கத்தக்கது.
வன்முறையில்லா சமூகத்தை மகாத்மா காந்தி அமைத்தார். சமூக நல்லிணக்கம், ஒற்றுமைக்காக நம்மை அர்ப்பணிப்போம்.
இவ்வாறு ஆளுநர் ரோசய்யா கூறினார்.