தமிழகம்

ஆட்குறைப்பு விவகாரம்: டி.சி.எஸ். நிறுவனம் விளக்கம்

சங்கீதா கந்தவேல்

தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட நாட்டின் தென் மாநிலங்களில் செயல்பட்டு வரும் டி.சி.எஸ். நிறுவனம், தனது மூத்த பணியாளர்களை கட்டாய பணிநீக்கம் செய்து வெளியேற்றி வருவதாக வெளியான செய்திகளை அந்நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக நேற்று (செவ்வாய்கிழமை) ட்விட்டரில் வெளியிட்ட தகவலில்: "டி.சி.எஸ். நிறுவனம் எவ்விதமான ஆட்குறைப்பு நடவடிக்கையையும், நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் செய்ய முற்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் நிறுவனத்தின் மீது எழுந்துள்ள புகார்கள் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.சி.எஸ். நிறுவனம் சரியாக பணியாற்றாதவர்கள் என்ற போர்வையில் 25,000 ஊழியர்களை வெளியேற்ற திட்டமிட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வேகமாக பரவியது. கடந்த சில வாரங்களாகவே இந்த செய்தி நிலவி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் டி.சி.எஸ். நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்துவந்தன. சி.ஐ.டி.யு. போன்ற தொழிற்சங்கங்களும் தனது கண்டனத்தை பதிவு செய்தன.

மேலும் இது தொடர்பாக டி.சி.எஸ். செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பணி திறன் அடிப்படையில் ஊழியர்களை நீக்குவது என்பது ஒரு நிறுவனத்தின் உள் விவகாரம். இது ஒவ்வொரு ஆண்டு நடைபெறுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதல் 9 மாதங்களில் 2,574 ஊழியர்கள் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது டி.சி.எஸ். மொத்த ஊழியர்கள் விகிதாச்சாரத்தில் 0.8% மட்டுமே" என்றார்.

இதற்கிடையில், சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் பெண் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, "சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து எங்களுக்கு எவ்விதமான உத்தரவும் வரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பணியாளர்கள் திறனாய்வு என்பது மிகவும் நேர்மையான, நியாயமான முறையில் நடைபெறுகிறது. நாங்கள் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள இந்த பிரச்சினைகளை நியாயமான முறையில் அணுகுவோம்" என்றார் அவர்.

SCROLL FOR NEXT