கிருஷ்ணகிரி அருகே வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து பழைய குற்றவாளிகளிடம் போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே ராமாபுரத்தில் செயல்பட்டு வரும் குந்தாரப்பள்ளி கிளை பாங்க் ஆப் பரோடா வங்கியில் கடந்த 24-ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் புகுந்து 48 கிலோ மதிப்புள்ள 6000 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து கோவை மேற்கு மண்டல ஐஜி சங்கர், 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டார். மேலும், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி சரகத்துக்கு உட்பட்ட குந்தாரப்பள்ளி மற்றும் வேப்பனப்பள்ளி உள்ளிட்ட காவல்நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளின் தற்போ தைய நிலைகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, குந்தாரப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் வெல்டிங் கடைகளில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பே வேலைக்கு சேர்ந்தவர்கள், இச்சம்பவத்திற்கு முன் அல்லது பின் வேலையை விட்டு நின்றவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதே போல் உள்ளூரில் சம்பவத்துக்குப் பிறகு இல்லாதவர்கள்குறித்தும் விசாரிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 3 மாநில போலீஸார் ஆலோசனை நடத்தினர் என்றனர்.
இதனிடையே கொள்ளையர் களிடமிருந்து தப்பிய நகைகள் கிருஷ்ணகிரி வங்கிக் கிளையில் வைக்கப்பட்டுள்ளன. அதனை மீட்க விரும்புபவர்கள் கிருஷ்ணகிரி கிளையில் மீட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் வங்கி இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் எனவும், நகை கடன்கள் தற்சமயம் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.