தமிழகம்

ஒரே குடும்பத்தில் 3 பேர் போட்டி- பொள்ளாச்சி தொகுதி யாருக்கு?

கா.சு.வேலாயுதன்

தொகுதி யாருக்கு என்றே தெரியவில்லை. ஆனால், பொளளாச்சி தொகுதியில் போட்டியிட திமுக-வில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அவரது மகன் பைந்தமிழ்பாரி, மருமகன் டாக்டர் கோகுல் இம்மூவருக்கும் இடையில் கடும் போட்டியே நடக்கிறது.

பொங்கலூரார் கோவை மாவட்டச் செயலாளர். பைந்தமிழ்பாரி கோவை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர். பொங்கலூராரின் மருமகன் கோகுலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதிக்காக கட்சியில் பணம் கட்டியவர். ஆனால், அவருக்கு சீட் இல்லை. பொங்கலூராரே கோகுலுக்கு வரவிருந்த வாய்ப்பை தட்டிவிட்டதாக பேச்சு உண்டு. இதன் பிறகு பொங்கலூராரை விட்டு ஒதுங்கிய கோகுல், ஸ்டாலினுடன் நெருக்கமானார்.

இந்த முறை பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட பைந்தமிழ்பாரியும் கோகுலும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். பொங்கலூராருக்காக கட்சியினர் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் கோகுலுவை திமுக மருத்துவ அணியின் மாநில இணைச் செயலாளராக கடந்த 2-ம் தேதி அறிவித்துள்ளது தலைமை.

இதையடுத்து அப்பாவையும் மகனையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு மருமகன் சீட் வாங்கப் போகிறார் என்று பேச்சு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து பொங்கலூராரிடம் பேசியபோது, '’ஒரு டாக்டரின் சேவை நாட்டுக்கு தேவை என்பதே எங்கள் எண்ணம். ஆனால், அவர் அரசியலில் ஆர்வமாக இருப்பதை நாம் தடுக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை அவர் வேறு கட்சிக்குள் இல்லாமல் எங்கள் கட்சியிலேயே என்னைவிடப் பெரிய பொறுப்புக்கு வந்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயமே. எந்த இடத்திலும் அவருடைய அரசியல் வளர்ச்சியை நாங்கள் தடுத்தது இல்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT