திருச்சி திருவெறும்பூர் அருகே சூரியூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் குளிர்பான தயாரிப்பு தொழிற்சாலையை மூட வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினருடன் ஊர் பொதுமக்கள் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். 2-வது நாளாக நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர்.
சூரியூர் நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த உண்ணா விரத போராட்டத்தில் திருவெறும் பூர் தொகுதி எம்எல்ஏ செந்தில் குமார்(தேமுதிக), திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி, சூரியூர் ஊராட்சி மன்றத் தலைவி சாரதாதேவி உட்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்துக்கு அருகே நேற்று குளிர்பான தொழிற்சாலைக்கு சொந்தமான வேன் ஒன்று வந்தது. அந்த வேனை போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர் சிறைப்பிடித்தனர்.
பாதுகாப்புக்காக அங்கிருந்த போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தி வேனை மீட்டு அனுப்பிவைத்தனர். வேன் சிறைபிடிப்பால் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.