ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியுடன் இணைந்த கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

 
தமிழகம்

26,000 மகளிர் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கிக் கடன்: பெருந்துறையில் முதல்வர் விஜய் தொடங்கினார்

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில், 26,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கியுடன் இணைந்த கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார்.

பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மகளிர் திட்ட அலுவலர்கள் சார்பில் மாநில அளவிலான தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இவ்விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற முதல்வர் விஜய், 26,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்குக் காசோலைகளை வழங்கினார். மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களைத் தொழில்முனைவோராக உருவாக்கு வதே இத்திட்டத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, 38 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரித்த பொருட்களின் கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். பொருட்களின் தயாரிப்பு முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். மகளிர் குழுவினர் தயாரித்த தனது உருவப்படம் இடம்பெற்ற மரச்சிற்பம், படுக்கை விரிப்பு, பத்தமடைப் பாய், நடனமங்கை ஓவியம், வாழைநார் பை உள்ளிட்ட பொருட்களை முதல்வர், பணம் கொடுத்து வாங்கினார்.

தொடர்ந்து, நீலகிரி மலைவாழ் மக்கள் தயாரித்த தேநீரையும் ருசித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த்,செங்கோட்டையன், விஜய் பாலாஜி, அருண்ராஜ், விஜயலட்சுமி, சம்பத்குமார் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

முதல்வருக்கு தீபாவளி வாழ்த்து: மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு காசோலைகளை வழங்கியபோது, பெண்கள் முதல்வர் விஜய்க்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவரும் பதிலுக்கு வாழ்த்து கூறினார். மேலும், இதய வடிவில் கைகளை வைக்கவும், கையெழுத்திடவும், வெற்றிச் சின்னம்போல விரல்களைக் காட்டவும் பெண்கள் கேட்டுக்கொண்டனர். அவர்களின் விருப்பங்களை முதல்வர் நிறைவேற்றியதால் பெண்கள் உற்சாகமடைந்தனர்.

முன்னதாக அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு மாவட்டம் செங்கப்பள்ளிக்குச் சென்றார். வழிநெடுகிலும் பொதுமக்களும் கட்சியினரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செங்கப்பள்ளியில் தொடங்கி பள்ள கவுண்டம்பாளையம், விஜயமங்கலம், சிப்காட், புதிய பேருந்து நிலையம்,பழைய பேருந்து நிலையம், அண்ணாசிலை என 7 இடங்களில் ரோடு ஷோ நடைபெற்றது. முதல்வரின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் 4,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT