கைது செய்யப்பட்ட முத்துராஜா, தர்ஷன், முகமது கான், முகமது ஆசிக்
சென்னை: இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு சட்டவிரோதமாக படகு மூலம் வந்த இலங்கை நபர்கள் மூவர் உட்பட 4 பேரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி கடற்கரை பகுதியில் க்யூ பிரிவு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் பாம்பன் தெற்குவாடி கடற்கரையை நோக்கி வந்த பைபர் படகை க்யூ பிரிவு போலீஸார் சோதனையிட்டனர்.
படகில் ஓட்டுநர் ராமேசுவரத்தைச் சேர்ந்த முத்துராஜா (44), இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் (34), முகமது கான் (32), முகமது ஆசிக் (25) ஆகிய 4 பேர் இருந்தனர். அவர்களிடம் க்யூ பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன.
இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் கடந்த பிப்.26-ம் தேதி சுற்றுலா விசாவில் பெங்களூரு விமான நிலையம் வழியாக இந்தியாவுக்கு வந்து பின்னர் நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ராமேசுவரத்தைச் சேர்ந்த முத்துராஜா என்பவரை தொடர்புகொண்ட தர்ஷன், இலங்கையில் இருந்து 2 பேரை படகு மூலம் தமிழகத்துக்கு அழைத்துவர வேண்டும் என்றும், இதற்காக ரூ.1.10 லட்சம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முத்துராஜாவுக்கு சொந்தமான பதிவு எண் இல்லாத பைபர் படகில் தர்ஷனும், முத்துராஜாவும் தனுஷ்கோடி கடற்கரையில் இருந்து வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் புறப்பட்டுச் சென்று, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் இரவு காத்திருந்தனர்.
இலங்கையில் இருந்து வந்த படகில் இருந்த முகமது கான், முகமது ஆசிக் ஆகிய இருவரையும் பைபர் படகில் ஏற்றிக்கொண்டு பாம்பன் தெற்குவாடி கடற்கரைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்திறங்கினர். முகமது கான், முகமது ஆசிக் ஆகிய இருவரும் போலி பாஸ்போர்ட் மூலம் லண்டனுக்கு செல்லவிருந்தது தெரியவந்தது.
பிடிபட்ட 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ள க்யூ பிரிவு போலீஸார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.