கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பின்னர், சிறையில் அடைப் பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட காளீஸ்வரன், கருப்புசாமி, தவசி.படம்: ஜெ.மனோகரன்.

 
தமிழகம்

கோவை கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் 3 பேருக்கு சாகும் வரை சிறை - முழு விவரம்

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட மூவருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த 21 வயதான மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஆண்டு நவ.2-ம் தேதி இரவு மாணவியும், அவரது நண்பரான கோவையில் ஆட்டோ மொபைல் கடை நடத்தி வரும் 25 வயது இளைஞரும் பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் உள்ள காலியிடத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர், தங்களிடம் இருந்த ஆயுதத்தால், அந்த இளைஞரை தாக்கிவிட்டு, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினர்.

          

பீளமேடு போலீஸார் வழக்குப்பதிந்து, இதில் தொடர்புடையவர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்தனர். இதன்படி 3 பேரை கோவை வெள்ளக்கிணறு பகுதி அருகே நவ.3-ம் தேதி போலீஸார் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி, கார்த்திக் என்ற காளீஸ்வரன், மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்ற தவசி எனத் தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி சுந்தரராஜ் வழக்கை விசாரித்தார். 112 சாட்சிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். 72 பேர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். சம்பவம் நடைபெற்று 4 மாதங்களில் இந்த வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று நீதிபதி சுந்தரராஜ், குற்றச்சாட்டை உறுதி செய்து மூவரையும் குற்றவாளிகள் என அறிவித்து, அவர்களுக்கு வாழ்நாள் (சாகும் வரை) சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். பின்னர், மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை பெற்றவர்களில் கருப்புசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பிரிவுகளுக்கு ஏற்ப தண்டனை விவரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் பி.ஜிஷா தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: இந்த வழக்கில் மூவருக்கும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 324(4)-க்கு (இழப்பு விளைவித்தல்) 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.500 அபராதம், 309(4)-க்கு (கொள்ளை) 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.500 அபராதம், 311-பிரிவுக்கு (ஆயுதம் காட்டி கொள்ளை) 7 ஆண்டு, 74-வது பிரிவுக்கு (மானபங்கம் செய்தல்) 1 ஆண்டு, ரூ.500 அபராதம், 76-வது பிரிவுக்கு (நிர்வாணப்படுத்துதல்) 3 ஆண்டு சிறை, ரூ.500 அபராதம், 127(2) பிரிவுக்கு (அடைத்து வைத்தல்) 1 ஆண்டு, 70(1) (கூட்டு பாலியல் வன்கொடுமை) பிரிவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிப்.2 அன்று விசாரணை தொடங்கியது. பிப்.23 அன்று விசாரணை முடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம், அவரது ஆண் நண்பருக்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT