முதல்வர் விஜய்

 
தமிழகம்

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு

முதல்வர் விஜய் உத்தரவு

வெற்றி மயிலோன்

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து, அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கினை வகித்து வருகின்றனர்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2026 முதல் அகவிலைப்படி 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், முதல்வர் விஜய் இதனைக் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2026 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.

இதனால், 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2026 முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 1,858 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

அரசின் இந்த நடவடிக்கை, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் எனத் தெரிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT