சென்னை: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலதிபர் ஜெம் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் உள்ளிட்ட 8 பேர் சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில், ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகிய 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குண்டர் சட்ட அறிவுரை குழுமத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் உட்பட 3 ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் முன்னிலையில் மூவரையும் விசாரணைக்கு போலீஸார் நேற்று நேரில் ஆஜர்படுத்தினர்.
முதலில் தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் தனியாக விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து மகேந்திர சிம்மன், சாந்தி ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மதியம் 2.30 மணி அளவில் தொடங்கிய இந்த விசாரணை மதியம் 3.10 மணியளவில் முடிவடைந்தது. 40 நிமிட விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வீரமணியின் மகள் உரிமை மீறல் வழக்கு
வீரமணியின் மகள் அர்ச்சனா, வெளிநாடு செல்லவிருந்த தன்னை விமானத்தில் இருந்து இறக்கி, விசாரணை என்ற பெயரில் தன்னிடம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படாத அர்ச்சனாவை, விமானத்தில் இருந்து இறக்கி நீண்டநேரம் அலுவலகத்திலேயே காத்திருக்க வைத்ததால் அவர் மயங்கி விழுந்தார்.
இதுமனித உரிமை மீறல். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், ‘‘விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் கொடுக்க மனுதாரரின் வீட்டுக்குச் சென்றபோது, அவர் இல்லாததால், காவலாளியிடம் கொடுக்கப்பட்டது.
மனுதாரர் வெளிநாடு செல்லவிருப்பதை அறிந்து விமான நிலையத்துக்குச் சென்று விசாரணைக்கு அழைத்து வந்தோம். மனுதாரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்’’ என கோரப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு சிறப்பு புலனாய்வுக்குழு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.17-க்கு தள்ளிவைத்துள்ளார்.