தமிழகம்

SIR | சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

த.சக்திவேல்

சேலம்: சேலம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 3,62,429 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிருந்தா தேவி வெளியிட்டார்.

அதன்படி கெங்கவல்லி தொகுதியில் 2,11,583, ஆத்தூரில் 2,20,568, ஏற்காட்டில் 2,63,724, ஓமலூரில் 2,85,233, மேட்டூரில் 2,45,596, எடப்பாடியில் 2,67,374, சங்ககிரியில் 2,51,866, சேலம் மேற்கில் 2,43,941, சேலம் வடக்கில் 2,24,423, சேலம் தெற்கில் 2,13,328, வீரபாண்டியில் 2,40,472 என 11 தொகுதிகளில் ஆண்கள் 13,30,117, பெண்கள் 13,37,688, இதரர் 303 என மொத்தம் 26,68,108 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகளின் போது கணக்கீட்டு தாள் படிவங்கள் பெறப்படாத இனங்களில் இறந்தவர்கள் 1,00,974, குடியிருப்பில் இல்லாதவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள் போன்ற இதர இனங்கள் 2,41,283, இரட்டை பதிவு இனங்கள் 20,171 என மொத்தம் 3,62,429 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. மேலும், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 3,468-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தப் பணிகளுக்கான கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளுக்கான படிவங்கள் 6, 7 மற்றும் 8 ஆகியவை அடுத்த மாதம் 18-ம் தேதி வரை பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பிப்ரவரி 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும், என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் 1,93,706 பேர் நீக்கம்: நாமக்கல்லில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு ஆட்சியர் துர்காமூர்த்தி கூறியது: மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பெயர் பட்டியலில் 6,17,269 ஆண்கள், 6,55,490 பெண்கள், 195 இதரர் என மொத்தம் 12,72,954 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் இறப்பு 66,312 பேர், நிரந்தர குடிபெயர்வு 1,00,201 பேர், இருமுறை பதிவு 8,636 பேர், கண்டறிய இயலாத வாக்காளர்கள் 18,023 பேர், மற்றவை 534 என மொத்தம் 1,93,706 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், என்றார்.

SCROLL FOR NEXT