சென்னை: மத்திய அரசு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவித்த நிலையில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஜூலை 1முதல் அகவிலைப்படி 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், முதல்வர் விஜய் பரிசீலித்து ஜூலை 1 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதனால், 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு 63 சதவீதமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.1,858 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜூலை முதல் அக்டோபர் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையானது தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வரின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கு, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் அமிர்தகுமார் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.