பிரதிநிதித்துவப்படம்

 
தமிழகம்

கிருஷ்ணகிரி: நீர் சுத்திகரிப்பு தொட்டிக்குள் விழுந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே தனியார் நிறுவனத்தில் பராமரிப்பு பணியின்போது, நீர் சுத்திகரிப்புத் தொட்டிக்குள் விழுந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விஷவாயு தாக்குதல் காரணமாக என விசாரணை நடைபெற்று வருகிறது.

 கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வன்னியபுரத்தில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நால்கோ நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள நானோ வடிகட்டுதல் தொட்டி (நுண்ணிய தண்ணீர் சுத்திகரிப்பு) பராமரிப்பு மற்றும் துப்புரவுப் பணிக்காக ஒப்பந்த தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்க முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக 3 பேர் தவறி விழுந்து நீரில் மூழ்கினர்.

தொடர்ந்து, அங்கிருந்த மீட்பு குழுவினர், தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றி, 3 பேரையும் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 3 பேரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ராயக்கோட்டை போலீஸார், 3 பேரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஆட்சியர் ச.தினேஷ் குமார், தனியார் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து ஆட்சியர் கூறும்போது, “முதல்கட்ட விசாரணையில் தொட்டி பராமரிப்பு பணியின் போது 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள், தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி தின்னூரைச் சேர்ந்த அக்மல் (28), பாலக்கோடு அருகே திருமால்வாடியை அடுத்த பெல்ராம்பட்டியை சேர்ந்த சாரதிகுமார் (25), அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த காவேரி (30) எனத் தெரியவந்துள்ளது” என்றார்.

மேலும், தொழிலாளர்கள் 3 பேரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்களா அல்லது நீரில் மூழ்கியா என்பது குறித்து உடற்கூறு ஆய்விற்கு பின்பே தெரியவரும் என போலீஸார் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT