தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவர். (உள்படம்) கொலையான மதபோதகர் கனகராஜ்.
தூத்துக்குடி: சென்னையைச் சேர்ந்த மதபோதகர் கொலை வழக்கில், அதே சபை ஊழியர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் பெந்தகோஸ்தே சபையின் தலைமை மதபோதகராக, சென்னை பெரம்பூர் மங்களபுரம் கிருஷ்ணதாஸ் சாலையைச் சேர்ந்த ஆர்.கனகராஜ் (74). என்பவர், 1960-ம் ஆண்டு முதல் வேலை செய்து வந்தார். சபை ஊழியர்கள் தங்கும் இடத்தில் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் கூரை அமைத்து தங்கியிருந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி காலையில் படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக, உடலை அடக்கம் செய்ய சிலர் முயற்சித்தனர். ஆனால், அவரது முகத்தில் காயங்கள் இருந்ததால், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி சிப்காட் போலீஸார் அனுப்பி வைத்தனர்.
கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அழுத்தியும் கனகராஜ் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். சபையில் ஒழுக்கம் மற்றும் வரவு செலவில் கனகராஜ் நேர்மையாக இருந்ததும், இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கனகராஜ் கொலை செய்யப்பட்டதும் ஓராண்டு கழித்து தெரியவந்தது.
இதே சபையின் ஊழியரான கன்னியாகுமரி வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த டைட்டஸ், அவரது சகோதரர் அண்டோ, கோட்டாறைச் சேர்ந்த ரகு, உதவி மதபோதகர் பணியாற்றிய குலவணிகர்புரத்தைச் சேர்ந்த ரா.ஜான்தாமஸ் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசா ரணைக் காலத்தில் உதவி மதபோதகர் ஜான்தாமஸ் இறந்து விட்டார். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட டைட்டஸ், அண்டோ, ரகு ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், டைட்டஸுக்கு ரூ.13,500, அண்டோவுக்கு ரூ.6 ஆயிரம், ரகுவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி எம்.பிரீத்தா நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜரானார்.