விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன்கள் இமானுவேல் (11), சாம் ஆபிரகாம் (7). இருவரும் தனியார் பள்ளியில் 5 மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர். போயர் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் ராஜா (13). அங்குள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நண்பர்களான மூவரும், தங்களது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நேற்று முன்தினம் பிற்பகலில் விளையாடினர். பின்னர் 3 சிறுவர்களையும் காணவில்லை.
இந்நிலையில் சின்னசேலம் அருகே நயினார்பாளையம் சாலையில் உள்ள தோட்டப்பாடி ஏரியில் 3 சிறுவர்களின் உடல்கள் மிதப்பது நேற்று காலை தெரியவந்தது. போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து. ஏரியில் மிதந்த 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.