மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்.23-ம் தேதி நடைபெற்று, முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகின. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஆட்சியமைக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் கடந்த 10-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். தேர்தலில் அதிமுக எம்எல்ஏக்கள் 47 பேர் வெற்றி பெற்ற நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு பழனிசாமி தலைமையில் 22 பேர், சி.வி.சண்முகம் தலைமையில் 25 பேர் என 2 அணியாக பிரிந்தனர்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு 13-ம் தேதி நடைபெற்றது. சட்டப்பேரவை அதிமுக தலைவர், கொறடா நியமிக்கப்படாத நிலையில், சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள், விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறியதால், கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பழனிசாமி தரப்பில், பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.
அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் நேற்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர். அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரபாகர் அறிவித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓர் உறுப்பினர் பதவி விலகும்போது காரணம் குறிப்பிடத் தேவையில்லை.
உறுப்பினர் விரும்பி ராஜினாமா கடிதம் கொடுக்கும்போது, கடிதம் முறையாக இருக்கிறதா என்று பார்ப்பது மட்டுமே எனது பணி. அதை சரியாகசெய்துள்ளேன். பேரவை விதி 21-ன்படி, பதவி விலக விரும்பும் உறுப்பினர், பேரவைத் தலைவருக்கு தனதுஎண்ணத்தை கைப்பட எழுதி தெரிவிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு தெரிவித்துள்ளதால், ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது.
பழனிசாமி, வேலுமணி அளித்த கடிதங்கள் எனது பரிசீலனையில் உள்ளன. ஆய்வுசெய்து வருகிறேன். விதிகளின்படி ஆய்வு செய்து முடிவெடுப்பேன். எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு பழனிசாமி தரப்பில் ஒருமுறை கடிதம் அளிக்கப்பட்டது. 2 முறை நினைவூட்டினர். இவ்வாறு அவர் கூறினார். ராஜினாமா ஏற்கப்பட்டதை அடுத்து, 3 பேரும் முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் அவரது அறையில் சந்தித்து தவெகவில் இணைந்தனர்.
அவர்களுக்கு தவெக உறுப்பினர் அட்டையும் உடனே வழங்கப்பட்டது. இதற்கிடையே, சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த ஆற்காடு எம்எல்ஏ சுகுமார் உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள், மன்னிப்பு கடிதம் கொடுத்து, பழனிசாமி அணியில் நேற்று இணைந்தனர். இதன்மூலம், பழனிசாமி அணி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. சி.வி.சண்முகம் அணி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 17 ஆக குறைந்தது. பழனிசாமி அணியை சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பேரவைத் தலைவரை சந்தித்து, ‘நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி மாறி வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நேற்று மீண்டும் வலியுறுத்தினர்.
ஏற்கெனவே முதல்வர் விஜய் வெற்றி பெற்று, ராஜினாமா செய்ததால், திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளது. இந்நிலையில், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ராஜினாமா செய்த மரகதத்தின் கணவர் குமரவேலை, திருப்போரூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பதவி,கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் விமர்சனம்: திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், ‘பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது, நம்பிக்கை வாக்கெடுப்புக்காக அதிமுகவின் ஒரு அணியை விலை பேசுவது. அமமுக உறுப்பினரை கொசுறு வாங்குவது, அதிமுக உறுப்பினர்களை பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.. இந்த மோசமான காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள் ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ‘ஆளுநர் மாளிகை முன்பு நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெகவின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.