தென்காசி: சுரண்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம், சுரண்டை, சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வ பிரபு (50). இவரது மனைவி உஷா (40). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உஷா, சுரண்டை நகராட்சி 7-வது வார்டு கவுன்சிலராக இருந்தார்.
இன்று காலையில் அருள்செல்வ பிரபு, இருசக்கர வாகனத்தில் தனது மனைவி உஷா மற்றும் மனைவியின் தங்கை பிளஸ்ஸி (35) ஆகியோரை அழைத்துக்கொண்டு, தங்கள் விவசாய நிலத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இவர்கள் 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சுரண்டை- சங்கரன்கோவில் சாலையில் இரட்டைகுளம் விலக்கு அருகே சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனம் மீது அந்த வழியாக காய்கறி ஏற்றிச் சென்ற லாரி மோதியது. லாரியில் சிக்கிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.