தமிழகம்

பன்னாட்டு உணவு நிறுவனங்களிடம் ரயில்களை அடகு வைக்காதீர்: ராமதாஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

உயிரைப் பறிக்கும் பன்னாட்டு உணவு நிறுவனங்களிடம் ரயில்வே துறையை அடகுவைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தொடர்வண்டித் துறை வருவாயை பெருக்கும் நோக்குடன் பல்வேறு திட்டங்களை அத்துறைக்கான அமைச்சகம் வகுத்துள்ளது. தொடர்வண்டிகளுக்கு தனியார் நிறுவனங்களின் பெயர்களைச் சூட்டுதல், தொடர்வண்டிகள் மற்றும் தொடர்வண்டி நிலையங்களில் விளம்பரங்களைச் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தல் ஆகியவை அரசின் திட்டங்களில் முக்கியமானவை ஆகும்.

மெக்டொனால்டு சென்னை சென்ட்ரல்

தொடர்வண்டித் துறை வகுத்துள்ள திட்டங்களின்படி ராஜ்தானி, சதாப்தி, மற்றும் துரந்தோ விரைவுத் தொடர்வண்டிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் பெயர்கள் சூட்டப்படவுள்ளன. பெப்சி ராஜ்தானி, கோகோ -கோலா சதாப்தி என தொடர்வண்டிகளுக்கு பெயர் சூட்டுவதற்கான ஒப்பந்தங்களை செய்து கொள்ள கோடிக்கணக்கில் பணம் தருவதற்கு இந்த நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை பெறும் நிறுவனங்களுக்கு தொடர்வண்டிகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் விளம்பரம் செய்யும் உரிமை வழங்கப்படும். அதேபோல் தொடர்வண்டி நிலையங்களுக்கு விளம்பரதாரர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அதன்படி சென்னை சென்ட்ரல் நிலையத்தின் விளம்பரதாரராக மெக்டொனால்டு நிறுவனம் நியமிக்கப்பட்டால், அதன் பெயர் மெக்டொனால்டு சென்னை சென்ட்ரல் என்று பெயர் மாற்றம் செய்யப்படும். அதன்பின் அந்த தொடர்வண்டி நிலையம் மற்றும் தொடர்வண்டி மேம்பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் விளம்பரம் செய்யும் உரிமை மெக்டொனால்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும். இதன்மூலம் தொடர்வண்டிகளிலும், தொடர்வண்டி நிலையங்களிலும் பெப்சி, கோக், பிட்சா, சிப்ஸ் வகைகள், பொறித்த கோழி உணவுகள் ஆகியவை குறித்த விளம்பரங்களை மட்டுமே காண முடியும். மேலும் பயணிகளிடம் மறைமுகமாக கட்டணம் பெறப்பட்டு இவை அனைத்தும் அவர்களுக்கு தரப்படும்.

தொடர்வண்டித்துறை சொத்துக்களைப் பயன்படுத்தி, அதன் நிதி நிலையை மேம்படுத்துவது குறித்து பரிந்துரை அளிப்பதற்காக தொடர்வண்டி வாரியத்தின் போக்குவரத்துப்பிரிவு உறுப்பினர் டி.பி. பாண்டே தலைமையில் கடந்த மாதம் பணிக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு தான் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

நிதி நெருக்கடியா?

தொடர்வண்டித்துறை அமைச்சராக லாலுவும், இணையமைச்சராக பா.ம.க.வைச் சேர்ந்த அரங்க.வேலுவும் பதவி வகித்த 5 ஆண்டு காலத்தில் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஒருமுறை கூட கட்டணத்தை உயர்த்தாமல் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை சேர்த்து வைத்திருந்தனர். ஆனால், இப்போது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 3 முறை கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் தொடர்வண்டித்துறை நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்றால் அதற்குக் காரணம் தலைமையின் நிர்வாகத் திறமையின்மை தானே தவிர வேறொன்றுமில்லை.

நிதி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கத்துடன் வருவாயை பெருக்குவதற்காக தொடர்வண்டித்துறை மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளைக் கூட குறை கூற முடியாது. ஆனால், இந்த முயற்சியில் விளம்பரதாரர்களாக தொடர்வண்டித் துறை தேர்ந்தெடுக்கவுள்ள நிறுவனங்கள் மிகவும் மோசமானவை; இவற்றின் உற்பத்திப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை. பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்கள் உடலுக்குத் தீங்கை ஏற்படுத்தக்கூடியவை என்று எண்ணற்ற ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. இந்த குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளும் கலந்திருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

பிட்சா மற்றும் பொறித்த உணவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமான கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. நீரிழிவு நோய், இதய நோய், புற்றுநோய் போன்ற உயிருக்கு உலைவைக்கும் தொற்றா நோய்களை இவ்வகை உணவுப்பொருட்களும், குளிர்பானங்களும் தான் ஏற்படுத்துகின்றன. கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உயிரிழப்புகளில் 53% சாவுகளுக்கு தொற்றாநோய்கள் தான் காரணமாக இருந்தன. இது 2020 ஆம் ஆண்டில் 57% ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வகை உணவுப்பொருட்களின் விற்பனையை முறைப்படுத்துவதற்காக தில்லி உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பணிக்குழு கடந்த 16.01.2014 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து 500 கெஜம் சுற்றளவில் இத்தகைய குளிர்பானங்களையும், உணவுப்பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

குளிர்பானம் , உணவு விளம்பரங்களுக்குத் தடை

சிகரெட் விற்பனைக்குக் கூட 100 கெஜம் சுற்றளவுக்கு மட்டுமே தடை உள்ள நிலையில், 500 கெஜம் சுற்றளவுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டிருப்பதிலிருந்தே இவற்றின் தீமையை உணர்ந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, இந்த வகை குளிர்பானங்கள் மற்றும் உணவு வகைகளின் விளம்பரத்திற்கு தடை விதிக்க வேண்டும்; குழந்தைகளுக்கு விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையமும், உலக சுகாதார அமைப்பும் அறிவுறுத்தியுள்ளன.

இத்தகைய சூழலில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் குளிர்பானங்கள் மற்றும் பொறித்த உணவு வகைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பெயர்களில் தொடர்வண்டிகளை இயக்குவதும், திரும்பிய திசைகள் அனைத்திலும் இந்த விளம்பரங்களை அனுமதிப்பதும், இதற்கெல்லாம் மேலாக அனைத்துப் பயணிகளுக்கு இவற்றை வழங்க அனுமதிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும்.

தொடர்வண்டித்துறையின் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவில் குழந்தைகளை நீரிழிவு நோய், இதயநோய், புற்றுநோய் போன்ற தொற்றாநோய்கள் அதிக அளவில் தாக்கக் கூடும். தொடர்வண்டித்துறையை நலிவு நிலையிலிருந்து மீட்பதற்காக அதில் பயணம் செய்யும் பயணிகளை நோயாளிகளாக்குவது சரியான அணுகுமுறை தானா? என சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

உயிரைப் பறிக்கும் பன்னாட்டு உணவு நிறுவனங்களிடம் தொடர்வண்டித்துறையை அடகுவைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக தொடர்வண்டிகளையும், அதன் சொத்துக்களையும் ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தி வருவாய் ஈட்டும் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.'' என்று ராமதாஸ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT