பாஜக கூட்டணிக்கு ஆதரவு திரட்ட, நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக மூத்த தலைவரும் தென்சென்னை தொகுதி வேட்பாளருமான இல.கணேசன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தலுக்கு முன்பு ஞானோதயம் பிறந்ததைபோல் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறைக்கு வருத்தம் அடைவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் காங்கிரஸை மக்கள் நம்பத் தயாராக இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்த ஊழல்களும் நிர்வாகச் சீர்கேடுகளும் ஏராளம். மீண்டும் ஒரு தவறு செய்ய மக்கள் வாய்ப்பு தரமாட்டார்கள்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத் தின் போது அதிமுக, திமுகவை பாஜக விமர்சிக்கவில்லை என்று கூறுகின்றனர். இப்போது நடப்பது, நாடாளுமன்றத் தேர்தல். பிரதமராக வேண்டியது மோடியா அல்லது பிறகு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கக் கூடிய ராகுலா என்பதை முடிவு செய்யும் தேர்தல். ஆனால் ஜெயலலிதாவா, கருணாநிதியா என்பதுபோல் சிலர் மக்களை திசை திருப்பி வருகின்றனர். நாங்கள் அப்படி திசை திருப்ப விரும்பவில்லை.
விஜயகாந்த், வைகோ மற்றும் பாமக தலைவர்கள் மோடியை பிரதமராக்கவும், பாஜகவை ஆதரித்தும் பிரச்சாரம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது.
ராமதாஸ் வராதது ஏன்?
பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலம் சரியில்லாததால் இன்னும் பிரச்சாரம் செய்ய வரவில்லை.அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இது அமைதியான தேர்தலுக்கு குந்தகம் விளைவிக்கும். அதேபோல் ஏ.கே.மூர்த்தியின் பிரச்சாரத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதலும் கண்டிக்கத்தக்கது. எதிர் அணியினர் விரக்தியின் விளிம்பில் இருப்பதால் இவ்வாறு செயல்படுகின்றனர்.
மோடி வருகை எப்போது?
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவுள்ளார். இதற்கான தேதி மற்றும் பொதுக்கூட்டம் நடக்கும் இடங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். மோடியின் பயண திட்டங் களை வானதி சீனிவாசன் தலைமையிலான குழுவினர் வகுத்து வருகின்றனர்.இவ்வாறு இல.கணேசன் கூறினார்.
மோடி வருகை குறித்து பாஜக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘ஏப்ரல் 2-வது வாரத்தில் மோடியின் தமிழக சுற்றுப்பயணம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.
சென்னை தி.நகர், பாஜக தலைமையகம் கமலாலயத்தில் இல.கணேசன் பத்திரிகையாளர்களை திங்கள்கிழமை சந்தித்தார். படம்: ம.பிரபு
ஏ.கே.மூர்த்தி பிரச்சாரத்தில் நடந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது. எதிர் அணியினர் விரக்தியில் உள்ளனர்.