தமிழகம்

4 ஆண்டுகளாக தாமதமாகும் புவிசார் குறியீடு: ஈரோடு மஞ்சள், சேலம் மாம்பழம் உட்பட ‘காத்திருப்பு’ பட்டியலில் 26 பொருட்கள்

டி.எல்.சஞ்சீவி குமார்

புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் ஈரோடு மஞ்சள், சேலம் மாம்பழம், கோவில்பட்டி கடலைமிட்டாய், திண்டுக்கல் பூட்டு உட்பட 26 பொருட்கள் ‘காத்திருப்பு’ நிலையிலேயே இருக்கின்றன என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் பாரம்பரியப் பண்புகள், தனித்த அடையாளங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு டார்ஜிலிங் தேநீர், மைசூர் பட்டு, தமிழகத்தின் தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றை பிற பகுதியினர் உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக இந்தியாவில் பொருட்களுக்கான புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999-ம் ஆண்டு இயற்றப்பட்டது.

உலக வர்த்தக மையத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்லாது, உலக அளவில் பொருட்களுக்கு இங்கு விண்ணப்பித்து புவிசார் குறியீடு பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசின் கீழ் செயல்படும் இதற்கான அலுவலகத்தின் தலைமையகம் சென்னை கிண்டியில் இருக்கிறது. இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் குறிப்பிட்ட பொருளுக்கான உரிமை மற்றும் தொழில் பாதுகாப்பை பெற முடியும். டெல்லியிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ ஒரு பட்டுப் புடவையை நெய்து, அதனை ‘காஞ்சிப் பட்டு’ என்று விற்க முடியாது.

முதலிடத்தில் கர்நாடகம்

மைசூர் பட்டு, மைசூர் சந்தனம், கூர்க் ஆரஞ்சு உட்பட மொத்தம் 32 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தேசிய அளவில் கர்நாடகம் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக, மதுரை மல்லி, தஞ்சாவூர் ஓவியங்கள், காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, சிறுமலை வாழை, கோவை வெட் கிரைண்டர் உட்பட 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழகம் 2-ம் இடத்தில் இருக்கிறது. மலபார் மிளகு, காசர்கோடு சேலைகள், வயநாடு ஜீரகசாலா அரிசி உட்பட 21 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று கேரளம் 3-ம் இடத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் இருந்து மேலும் 26 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2010, 2011, 2014 ஆகிய 3 ஆண்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பொருளுக்குக்கூட புவிசார் குறியீடு வழங்கப்படவில்லை. இதுகுறித்து உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறியதாவது:

உலகில் சிறந்த ஈரோடு மஞ்சள்

உலகின் மற்ற பகுதி மஞ்சளைவிட ஈரோடு மஞ்சளில் ‘கர்குமின்’ என்ற நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். நாட்டின் மொத்த மஞ்சள் உற்பத்தி 35 - 40 லட்சம் மூட்டைகள். இதில் தமிழகம் 7 லட்சம் மூட்டைகளை உற்பத்தி செய்கிறது. இதில் பெரும்பாலும் ஈரோடு சுற்றுவட்டாரங்களில் உற்பத்தி செய்யப்படுபவை. புவிசார் குறியீடு மையத்தில் 3 ஆண்டுகளைக் கடந்தும் ஈரோடு மஞ்சளுக்கான விண்ணப்பம், பரிசோதனை நிலையிலேயே இருக்கிறது. இதற்கு புவிசார் குறியீடு கிடைத்தால் உலக அளவில் ஈரோடு மஞ்சளின் மதிப்பு உயரும்.

இதேபோல திண்டுக்கல் பூட்டு, சேலம் மாம்பழம், திருவில்லிப் புத்தூர் பால்கோவா, ஓசூர் ரோஜா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, நரசிங்கப் பட்டி நாதஸ்வரம், மாமல்லபுரம் சிற்பங்கள் உட்பட மொத்தம் 26 பொருட்கள் கடந்த 4 ஆண்டுகளாக பரிசோதனை நிலையில் இருக்கின் றன. இவற்றுக்கும் புவிசார் குறியீடு கிடைத்தால், தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

18 பொருட்களுக்கு விரைவில்..

இதுகுறித்து மத்திய அரசின் புவிசார் குறியீடு பதிவு மைய வட்டாரங்கள் கூறும்போது, ‘‘காத்திருப்பு பட்டியலில் இருக்கும் 26 பொருட்களில் 18 பொருட்களுக்கான பரிசோதனைகள் முடிந்துவிட்டன. அவற்றுக்கு விரைவில் புவிசார் குறியீடு வழங்கப்படும்’’ என்றனர்.

அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவரும் அரசு கூடுதல் வழக்கறிஞருமான சஞ்சய் காந்தியிடம் கேட்டபோது, ‘‘புவிசார் குறியீடு பெற விண்ணப்பிப்பவர்கள் அதோடு விட்டுவிடுகின்றனர். குறியீடு பெறும் பொருளில் குறைபாடு, சந்தேகம் இருந்தால் அந்த மையம் விளக்கம் கேட்கும். ஆய்வு அறிக்கைகள் உள்ளிட்டவை மூலம் அதற்கான விளக்கங்களை சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து கவனித்துவந்தால் தாமதம் ஆகாது’’ என்றார்.

SCROLL FOR NEXT