தமிழகம்

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண் டாடப்படுகிறது. சென்னையில் தங்கியிருப்பவர்கள் சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட ஆர்வத்துடன் புறப்பட்டுச் சென்றனர். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படு கிறது. கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களால் வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள், தங்கள் சொந்த ஊரில் பொங்கலை கொண்டாட ஆர்வமாக இருப்பர். இதனால், பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்பே சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்குவர்.

குறிப்பாக, தலைநகர் சென்னை யில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பொங்கலுக்காக சொந்த ஊர்களுக்கு செல்வர். அவர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது. ஆனால், அந்த ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டன. இதனால், பெரும்பாலான மக்கள் ஊருக்கு செல்ல அரசு மற்றும் ஆம்னி பஸ்களையே நம்பியிருந்தனர்.

அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் 7,250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. சென்னையில் இருந்து மட்டும் வெளியூர்களுக்கு 4,655 பஸ்கள் இயக்கப் பட்டன. இந்த சிறப்பு பஸ்கள் கடந்த 10-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 நாட்களாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. பல ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று கோயம்பேட்டில் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்பதிவு செய்யப்படாத பஸ்களில் குழந்தைகளுடன் ஆண்களும் பெண்களும் முண்டியடித்து ஏறினர்.

பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள 1, 2-வது நடைமேடை மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 7, 8, 9 நடைமேடைகளில் இருந்து முன்பதிவு செய்யப்படாத பஸ்கள் இயக்கப்பட்டன. 3, 4, 5, 6 நடை மேடைகளில் முன்பதிவு செய்யப்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களை நிறுத்திவைக்க கோயம்பேடு வணிக வளாகத்தில் தற்காலிக பணிமனை அமைக்கப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம் வர வர, வயர்லெஸ் மூலம் தகவல் தரப்பட்டு பஸ்கள் வரவழைக்கப்பட்டன.

ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுக்க பஸ் நிலையத்தில் மொத்தம் 23 கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டிருந்தன. ஏராளமான போலீ ஸாரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2 நாட்களாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆய்வு நடத்தி, பயணிகளின் குறைகளை கேட்டறிந்தார். தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில் போதிய அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 4 நாட்களில் மட்டுமே சுமார் 3.80 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். திருச்சிக்கு 20 ஏசி பஸ்களும் இயக்கப்பட்டன. இன்று (நேற்று) மட்டும் 1,457 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன’’ என்றனர்.

அரசு பஸ்கள் மட்டுமின்றி ஆம்னி பஸ்களும் அதிக அளவில் இயக்கப்பட்டன. அவற்றிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆம்னி பஸ்களில் வழக்கத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக சில பயணிகள் புகார் தெரிவித்தனர். கட்டணம் அதிகம் இருந்தாலும் உட்கார இடம் கிடைத்தால் போதும் என பலர் ஆம்னி பஸ்களை தேடிச் சென்றனர். தனியார் வேன்கள், டாக்ஸிகளிலும் மக்கள் பயணம் செய்தனர்.

இதேபோல், ரயில்களிலும் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் கூட்டம் அமை மோதியது. முன்பதிவு செய்யாத பெட்டிகளில் மூச்சுத் திணறும் அளவுக்கு கூட்டம் இருந்தது.

SCROLL FOR NEXT