தமிழகம்

காரைக்குடியில் திமுக முன்னாள் அமைச்சர் தென்னவனை கொலை செய்ய முயற்சி: வீட்டுப் பணியாளர்கள் 3 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி யில் முன்னாள் திமுக அமைச்சர் தென்னவன் வீட்டுக்குள் புகுந்த திமுகவினர் அவரை கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இதில், ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் வீட்டில் உள்ள பொருட் கள், கார்களை அடித்து சேதப்படுத் தியது. இதைத் தடுக்கச் சென்ற பணியாளர்களைத் தாக்கியதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

திமுக முன்னாள் அமைச்சர் தென்னவன் திமுகவில் மாநில இலக்கிய அணி துணைத் தலைவராகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவரது வீடு காரைக்குடியில் செக்காலை சர்ச் அருகே சண்முகராஜா தெருவில் உள்ளது. நேற்று மதியம் வீட்டில் அவரது அறையில் தென்னவன் இருந்துள்ளார். அவரது மனைவி, மகள்கள் ராமஜெயம், கண்ணாத்தாள் மற்றும் பணியாளர்கள் கார்மேகம், சேகர், செபஸ்திமுத்து ஆகியோர் இருந்துள்ளனர்.

அப்போது, காரைக்குடியைச் சேர்ந்த மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் முரளி, மாணவரணி அமைப்பாளர் பாலமுருகன், மீனவர் அணி அமைப்பாளர் நாராயணன், முன்னாள் நகர் செயலர் துரை. கணேசன் தலைமையில் 20 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்கியதாக தென்னவனின் மகள் ராமஜெயம் காரைக்குடி வடக்கு போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

இதில் அவர் கூறியிருப்பதாவது: தனி அறையில் இருந்த தென்னவனை கொலை செய்ய முயன்றனர். தடுக்கச் சென்ற பணியாளர்கள் கார்மேகம், சேகர், செபஸ்திமுத்து ஆகியோரை அக்கும்பல் தாக்கியதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.

வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினர். வீட்டின் முன் நின்ற இரு கார்களையும் தாக்கி சேதப்படுத்தினர். தென்னவனின் மனைவி மற்றும் மகள்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். பின்னர் போலீஸார் வருவது தெரிந்ததும் அக்கும்பல் தப்பியோடியதாகவும், தென்னவனை கொலை செய்யாமல் விட மாட்டோம் என எச்சரித்து சென்றதாகவும் அவரது மகள் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் விசாரித்து வருகிறார்.

திமுகவின் உட்கட்சி பூசல் காரணமாக இச்சம்பவம் நடந் துள்ளதால் அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் முரளியின் வீட்டை எதிர்கோஷ்டியினர் தாக்கினர். இதுதொடர்பாகவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதல் சம்பவத்தில் சேதமடைந்த கார். (உள் படம்) முன்னாள் அமைச்சர் தென்னவன்.

SCROLL FOR NEXT