பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள், பயிற்சி பெற்ற மருத்துவ அலுவலர்கள், மருந்து, மாத்திரைகள் என அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
பன்றிக் காய்ச்சல் பரவாமல் இருக்க சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க இங்குள்ள மருத்துவ அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப் படும் டாமிபுளூ மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் சென்னை மாநகராட்சியில் போதுமான அளவில் உள்ளன.
பன்றிக் காய்ச்சல் தடுப்பு குறித்து சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் 200 மருத்துவ அலுவலர்களுக்கு ரிப்பன் கட்டிட வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் நோய் சிகிச்சை குறித்தும், நோய் தடுப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மாதிரிகள் எடுப்பது, இந்த வைரஸ் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது ஆகியவை குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பன்றிக் காய்ச்சல் வராமலும், பரவாமலும் இருக்க பொதுமக்களுக்கு எந்த வகையான நலக்கல்வி அளிப்பது என்றும் ஆலோசிக் கப்பட்டது.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.