தமிழகம்

ஆவின் பால் 250 மி.லிட்டர் பாக்கெட் விரைவில் அறிமுகம்: பச்சை நிற பாக்கெட் ரூ.11-க்கு விற்கப்படும்

செய்திப்பிரிவு

ஆவின் நிறுவனம் புதிதாக கால் லிட்டர் பால் பாக்கெட்களை அறிமுகம் செய்யவுள்ளது. பச்சை நிற பாக்கெட்டை ரூ.11-க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட் டுள்ளது.

தமிழகத்தில் பல தனியார் பால் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும் அரசு நடத்தும் ஆவின் பாலைத்தான் பொது மக்கள் அதிகமாக வாங்குகின்றனர். ஆவின் நிறுவனம் பொதுமக்கள் வசதிக்காக புதிதாக கால் லிட்டர் (250 மி.லி.) அளவு கொண்ட பால் பாக்கெட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 26.32 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இவற்றில் 21 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் மூலம் தமிழக முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 11.50 லட்சம் லிட்டர் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது.

ஆவின் நிறுவனம் சார்பில் சமன்படுத்திய பால் (நீலம் நிறம்), நிலைபடுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்), கொழுப்புச் சத்து செறிவூட்டப்பட்ட பால் (ஆரஞ்சு), இரு முறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா) என 4 வகைகளில் ஒரு லிட்டர் மற்றும் அரை லிட்டர் என்ற அளவுகளில் பாலை விற்பனை செய்துவருகிறது.

தற்போது ஆவின் கால் லிட்டர் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதற் கட்டமாக நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) வகையில் அறிமுகம் செய்யப் படவுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனையை உயர்த்துவதற்கு அரசு பல நடவடிக்கை எடுத்து வரு கிறது. தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை செய்வது போல் கால் லிட்டர் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதற் கட்ட மாக ஒரு சில பகுதியில் கூடிய விரைவில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆவின் கால் லிட்டர் (250 மி.லி.) பாக்கெட் பாலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.11 ஆக இருக்கும். வரும் ஆண்டின் தொடக்க வாரங்களில் இந்த புதிய கால் லிட்டர் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்படவுள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT