திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் நேற்று பட்டப்பகலில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடி கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டது. அப்பகுதியிலுள்ள வீடுகள், கடை, ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிளை அக்கும்பல் சேதப்படுத்தியதுடன், இளைஞரையும் அரிவாளால் வெட்டியது.
வண்ணார்பேட்டையில் நேற்று காலையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை சிலர் சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதை இப்பகுதியில் வசிக்கும் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தான் செய்ததாக கருதி, 8 பேர் கொண்ட ரவுடி கும்பல் நேற்று மதியம் 1.30 மணியளவில் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வண்ணார் பேட்டை வளையாபதி தெருவுக்கு வந்தது. அங்கிருந்தவர்களை தரக்குறைவாக பேசியதுடன், கொலைமிரட்டல் விடுத்தது. அக்கும்பலை சேர்ந்தவர்கள் சிவப்பு துணியை முகமூடியாக கட்டியிருந்தது.
ரவுடிகளின் மிரட்டலை அடுத்து அங்குவசிக்கும் மக்கள் கதவுகளை பூட்டிக்கொண்டு, வீடுகளில் கொலை நடுக்கத்துடன் இருந்தனர். சில வீடுகள் மற்றும் ஒரு கடையை அக்கும்பல் சேதப்படுத்தியது. அங்கு வந்த எம்.சிவராமமணி (27) என்பவர், இந்த கும்பலை பார்த்ததும் தப்பியோடினார். அவரை விரட்டி சென்ற ரவுடி கும்பல் அரிவாளால் வெட்டியது.
அப்பகுதியில் தெருவில் நின்ற 2 ஆட்டோக்கள், 3 மோட்டார் சைக்கிள்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. பலத்த காயமடைந்த சிவராமமணி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பட்டப்பகலில் நடைபெற்ற ரவுடிகள் அட்டகாசம் குறித்து தகவல் கிடைத்ததும் மாநகராட்சி காவல்துறை ஆணையர் சுமித்சரண், பாளையங்கோட்டை உதவி ஆணையர் ஜி.எஸ்.மாதவன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று சுமித்சரண் அப்போது தெரிவித்தார். சம்பவ இடத்தில் போலீஸார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
வண்ணார்பேட்டையில் ஆட்டோக்கள் உடைக்கப்பட்ட பகுதியை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் பார்வையிட்டார்.