தமிழகம்

ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும்: ஆளுநர் ரோசய்யா வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ரோசய்யா கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேசிய வாக்காளர் தின விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது வாக்காளர் பட்டியலில் அதிகம் இளைஞர்கள் சேர்ப்பு மற்றும் திருத்தப் பணியில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்கள் கே.விவேகானந்தன், எ.ஞானசேகரன், கே.வீர ராகவராவ், துணை ஆட்சியர்கள் மதுசூதன் ரெட்டி, ரஸ்மி சித்தார்த் ஜகடே, தாசில்தார் வி.முத்தையன், வாக்காளர் விழிப்புணர்வு பணியில் சிறப்பாக பணியாற்றிய எஸ்.சூர்யபிரகாஷ் ஆகியோருக்கு ஆளுநர் ரோசய்யா விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ரோசய்யா பேசியதாவது:

உலக நாடுகளில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கிறது. நமது அரசியலமைப்பு இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயக குடியரசு ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. நேர்மையாகவும், எளிமையாகவும், வெளிப்படையாகவும் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்கள் ஆர்வமாக தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வருகிறார்கள். அதிலும், தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 லட்சம் புதிய வாக்காளர்களில் 6 லட்சம் இளைஞர்கள் ஆர்வமாக சேர்ந்துள்ளனர். இவர்கள் வரும் காலங்களில் நியாயமான முறையில் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. அதை பயன்படுத்தி நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடத்த உறுதுணையாக இருந்து ஜனநாயகத்தின் தூண்களை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில தேர்தல் ஆணையர் எஸ்.அய்யர், தமிழக அரசு தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன், தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, ஆளுநரின் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT