தமிழகம்

டாக்டர், துறைமுக அதிகாரி வீடுகளில் 43 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை

செய்திப்பிரிவு

டாக்டர் தம்பதி வீட்டிலும் துறைமுக அதிகாரியின் வீட்டிலும் புகுந்த மர்ம நபர்கள் 43 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர்.

சென்னை பெரம்பூர் திருவள்ளுவர் நகர் சிறுவள்ளூர் தெருவில் அடுக்குமாடிக் குடியிருப் பில் வசிப்பவர் முரளி மனோகர். சென்னை அரசு மருத்துவமனை டாக்டர். இவரது மனைவி நிர்மலா, தனியார் மருத்துவமனையில் டாக்டர். திங்கள்கிழமை வெளியூர் சென்றுவிட்டனர். செவ்வாய்க்கிழமை காலை அவர்களது வீட்டு கதவின் பூட்டு உடைந்து கிடப்பதை பக்கத்து வீட்டினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், செம்பியம் போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். 15 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் திருட்டுப்போனது தெரியவந்தது.

கொளத்தூர் பூம்புகார் நகர் 26-வது தெருவில் வசிப்பவர் பழனி. சென்னை துறைமுகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி லட்சுமி. திங்கள்கிழமை இரவு புழுக்கமாக இருந்ததால் இருவரும் வீட்டின் மாடியில் தூங்கினர். காலையில் கீழே வந்தபோது, வீட்டிற்குள் பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 28 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தன. இதுகுறித்து மாதவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT