சிங்கப்பூரில் இயங்கிவரும் தங்கமீன் பதிப்பகம், 4 பெண் எழுத்தாளர்களின் 6 புதிய நூல்களை சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடுகிறது.
நூர்ஜஹான் சுலைமான் எழுதிய ‘தையல் மெஷின்’, ரம்யா நாகேஸ்வரன் எழுதிய ‘அகம்’, சூர்ய ரத்னா எழுதிய ‘ஆ..!’, ‘பரமபதம்’ கமலாதேவி அரவிந்தன் எழுதிய ‘நிகழ்கலையில் நான்’, ‘கரவு’ ஆகிய நூல்கள் இந்த புத்தகக் காட்சியில் வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து தங்கமீன் பதிப்பக ஆசிரியர் பாலு மணிமாறன் கூறும்போது, “தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். எழுத்தின் மீது ஆர்வம்கொண்ட இவர்கள், அங்கு தமிழை வளர்க்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற இலக்கிய ஆர்வலர்களுக்கு சிறந்ததொரு தளத்தை அமைத்துத் தருவதே தங்கமீன் பதிப்பகத்தின் நோக்கமாகும்.
கடந்த ஆண்டுகளில், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் எங்கள் பதிப்பக நூல்களை வெளியிட்டு வந்தோம். இந்த வருடம், சிங்கப்பூர் தேசியக் கலை மன்றத்தின் ஆதரவுடன் சென்னைப் புத்தகக் காட்சியில், 4 பெண் எழுத்தாளர்களின், 6 நூல்களை வெளியிடுகிறோம். தமிழகத்தில் தனித்து இயங்கும் புதியதொரு பதிப்பகத்தை தொடங்கும் எண்ணமும் எங்களுக்கு உள்ளது” என்றார்.