திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழ்நாடு அரசு சினிமா ஒழுங்குமுறை சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள திரையரங்குகள், ஏ.சி. திரையரங்குகள் வசூலிக்க வேண்டிய குறைந்தபட்ச கட்டணம், அதிகபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மூன்று திரையரங்குகளுக்கு மேல் உள்ள மல்டிபிளக்ஸ்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், திரையரங்குகளில் அதன்படி கட்டணம் வசூலிக்கப் படுவதில்லை. குறிப்பாக பண்டிகை காலங்களில் அளவுக்கு அதிகமாக கட்டணத்தை வசூலிக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான ‘லிங்கா’ படம் மூலம் ரூ.500 கோடியை அவர்கள் சுருட்டியுள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு புகார் கொடுத்த பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, திரையரங்குகள் கூடுதல் கட்டணம் வசூலித்து பொது மக்களின் பணத்தை கோடிக் கணக்கில் சுருட்டப்படுவது குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மாலா முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்து அவர் உத்தரவிட்டார்.