தமிழகம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் டூ, பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலை வாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் உதவித் தொகை விண்ணப்பங்களை பெற சென்னை நந்தனத்தில் உள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும் 40 வயதுக்குட்பட்ட வராகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45வயதுக்கு மிகாமலும், விண்ணப்பதாரர்கள் தனியார், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000 மிகாமல் இருப்பவராகவும் மற்றும் அரசு நிர்ணயித்துள்ள இதர தகுதிகளுக்கு உட்பட்டவராகவும் இருப்பவர்கள் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர் ஆவர்.

மாற்றுத் திறனாளிக்கு உச்சவரம்பில்லை

மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர் பதிவேட்டில் உள்ளவர்கள் சென்னை கிண்டியில் உள்ள மகளிர் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வித்தகுதி மற்றும் குடும்ப ஆண்டு வருமானத்தில் உச்சவரம்பு ஏதுமில்லை.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் (MR. No.) ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT